> தக்காளியின் சிறப்பு <
தக்காளி, இதனை உண்ணக்கூடிய பழவகையிலும், காய்கறிவகையிலும் சேர்க்கலாம். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தக்காளி ஒரு அருமையான பழம் என்ற அந்தஸ்தைப் பெறுகிறது.
குளிர்ச்சித் தன்மை கொண்ட தக்காளியை விஷப்பழம் என்றே ஆரம்ப காலங்களில் கருதப்பட்டன. பின் இதன் சுவை மற்றும் பயன்பாட்டின் காரணமாக கடந்த 200 ஆண்டுகளில் இப்பழம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பினை பெற்று விட்டது. இன்றைக்கு உலக நாடுகள் அனைத்திலும் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது.
இப்பழத்தின் தாயகம் மத்திய அமெரிக்கா என்று கருதப்படுகிறது. ஆனால் இப்பழம் ஸ்பானியர்களால் உலகமெங்கும் பரப்பப்பட்டது.
தக்காளியானது ஒரு ஆண்டு மட்டுமே உயிர் வாழும் செடி வகைத் தாவரம் ஆகும். இச்செடி 1 முதல் 3 மீட்டர் உயரம் வரை வளரும்.
தக்காளியின் அறிவியல் பெயர் சோலானம் லைக்கோ பெர்சிகம் என்பதாகும். கத்தரிக்காய், மிளகாய், உருளைக்கிழங்கு, தக்காளி உள்ளிட்ட தாவரங்கள் சோலானேசியே என்ற நிழல் சேர் தாவர குடும்பத்தை சார்ந்தது.
இப்பழம் அடிப்படையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதால் செயல்பாட்டு உணவு என அழைக்கப்படுகிறது.
தக்காளி சிவப்பு, மஞ்சள், ஊதா, வெள்ளை, ஆரஞ்சு, வெளிர் சிவப்பு, பச்சை ஆகிய வண்ணங்களில் விளைவிக்கப்படுகிறது. எனினும் தக்காளியின் வண்ணம் சிவப்பு என்றே பொதுவாக அறியப்படுகிறது.
இப்பழம் உள்ளே சாறு நிறைந்த வெளிர் சிவப்பான மென்மையான சதைப்பகுதியையும், அதனுள்ளே மஞ்சள் நிற எண்ணற்ற விதைகளையும் கொண்டுள்ளது. இப்பழம் புளிப்பு கலந்த இனிப்பு சுவை உடையது.
இப்பழத்தாவரம் எளிதாக பயிர் செய்ய கூடியதாகவும், எளிதில் வளரக்கூடியதாகவும் இருப்பதால் பல நாடுகளின் உணவுப் பட்டியலில் இது நிலையான இடத்தை பெற்றுள்ளது.
ஊட்டச்சத்துக்கள் :
தக்காளியில் விட்டமின் ஏ, சி, இ, கே, பி1(தயாமின்), பி3(நியாசின்), பி5(பைரிடாக்ஸின்), போலேட்டுக்கள் போன்ற சத்துக்கள் உள்ளது.
இப்பழத்தில் தாதுஉப்புக்களான கால்சியம், மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், துத்தநாகம், இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்றவைகளும் உள்ளன.
நுண்ஊட்டச்சத்துக்களான பீட்டா கரோடீன், ஆல்பா கரோடீன், லைக்கோபீன், லுடீன் ஸீக்ஸாத்தைன் போன்ற சத்துக்களும் இப்பழத்தில் உள்ளது.
கார்போஹைட்ரேட்டுகள், புரோடீன்கள், நார்சத்து போன்றவற்றையும் இப்பழம் கொடுக்கிறது.
- மருத்துவ பண்புகள் -
ஆன்டிஆக்ஸிஜென்ட் :
தக்காளியில் லைக்கோபீன் என்ற ஆன்டிஆக்ஸிஜென்டுகள் அதிகளவு உள்ளன. இது உடல் வளர்ச்சிதை மாற்றத்தின் போது வெளியாகும் ப்ரீரேடிக்கல்களினால் ஏற்படும் புற்றுநோய் தாக்குதலிருந்து உடலை பேணி பாதுகாக்கிறது.
கர்ப்பப்பை வாய், மலக்குடல், தொண்டை மற்றும் உணவுக்குழாய், இனப்பெருக்க உறுப்பு, மார்பகம் ஆகிய இடங்களில் புற்றுநோய் ஏற்படுவதை இப்பழத்தில் உள்ள லைக்கோபீன்கள் பாதுகாக்கின்றன.
கொலஸ்ட்ரால் மற்றும் இதயப் பாதுகாப்பு :
தக்காளியில் உள்ள லைக்கோபீன்கள் உடலில் கொலஸ்ட்ராலினைத் கட்டுப்படுத்துகிறது. இப்பழத்தை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் அளவினைக் குறைக்கிறது.
கெட்ட கொழுப்புக்கள் மற்றும் டிரைகிளிசராய்டுகள் இரத்தக் குழாய்களில் படிந்து மாரடைப்பை ஏற்படுத்துகிறது. எனவே தக்காளியை உணவில் சேர்க்கும்போது மாரடைப்பு வருவது தடை செய்யப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக நாளை தக்காளியில் உள்ள மேலும் சில சிறப்பம்சங்கள் பற்றி பார்ப்போம்!
Manjunadhan Sri.
வாழ்த்துகள்...!
•┈┈• ❀ ❀ •┈┈•
No comments:
Post a Comment