சத்தும் சுவையும் குறையாத இறால் வறுவல்
தேவையானவை
இறால் – அரை கிலோ
எண்ணெய் – தேவையான அளவு
வறுவல் கலவை – 4 மேஜைக்கரண்டி
வறுவல் கலவை
இஞ்சி பூண்டு விழுது – 3 மேஜைக்கரண்டி
வறுத்து பொடித்த மிளகாய்ப் பொடி – 2 தேக்கரண்டி
வறுத்து பொடித்த அரிசி மாவு – 1 மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
உப்பு – ருசிக்கேற்ப
எப்படி செய்வது?
இறாலின் மேல் இருக்கும் ஓடு போன்ற பகுதியை நீக்குங்கள். இறாலில் குடல் பகுதியை நீக்குவது அவசியம். ஓடு நீக்கி இறாலின் மேல் தோல் பகுதியை ஒட்டி குடல் பகுதி இருக்கும். இது மெல்லி கோடாக தெரியும். அதன் வெளி தெரியும் முனையை இழுத்தால் முழுதாக வந்துவிடும். இதுபோன்று ஓடு, குடல் நீக்கியவற்றை குறைந்தது நான்கு (மணல் துணுக்குகள் ஒட்டிக்கொண்டிருக்கும்) முறை கழுவுங்கள்.
கழுவிய இறாலில் நீரை இறுக வடித்துவிட்டு, அதில் மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்ப் பொடி, அரிசி மாவு போட்டு பிசறிவிடுங்கள். 15 நிமிடங்கள் இதை அப்படியே வைத்திருங்கள்.
ஒரு வாணலியில், மிதமான கொள்ளவில் எண்ணெய் விடுங்கள். தீயை மிதமாக வையுங்கள். எண்ணெய் காய்ந்ததும் பிசறி வைத்திருக்கும் இறாலைப் போட்டு, வேகவிட்டு எடுங்கள். இறாலை மொறுமொறுமென ஆக்கினால் மெல்லுவதற்கு கடினமாக இருக்கும், அதிலுள்ள சத்துக்களும் அழிந்துவிடும். அதனால் எண்ணெயில் வேகவிட்டு எடுங்கள் போதும். சுவை, சத்தும் முழுதாக அப்படியே இருக்கும்.
பரிமாறும்போது அரிந்த பெரிய வெங்காயத்துடன் எலுமிச்சைச் சாறு பிழிந்து உண்ணுங்கள்.
No comments:
Post a Comment